ஜெயலலிதா படத்துடன் நோட்டுப் புத்தகம் விநியோகம்

By செய்திப்பிரிவு

காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளன்றே 2-வது பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் 3-வது செட் சீருடைகள் ஆகியவற்றை வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. நோட்டுகளின் முகப்பு அட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்ததால் மாணவ-மாணவிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்களும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

உடனடியாக இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகளில் புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டன. நோட்டுகள் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு முதல் பருவத்தின்போது வழங்கப்பட்ட நோட்டுகளில் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படம் முன்பு இடம்பெற்றிருந்தது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் மற்றும் எம்எல்ஏ தகுதியை இழப்பதற்கு முன்னரே (செப்டம்பர் 27) அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன.

நோட்டுகள் விநியோகிக்கப்படாத பள்ளிகளில் ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து அதன்பிறகு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE