புன்னகையை பரிசளிப்போம்!- இலவசமாக `பல் செட்’

By செய்திப்பிரிவு

வழக்கமாக செயற்கை கால், கை, சக்கர நாற்காலி, கண் கண்ணாடி போன்றவற்றை இலவசமாக வழங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கோவையில் ஓர் அமைப்பு இலவசமாக `பல் செட்’களையே வழங்கி ஆச்சரியப்படுத்தியது.

கோவையில் செயல்படும் சிந்து சமூக நல அமைப்பு சார்பில் குஜராஜ் சமாஜ் திருமண மண்டபத்தில் நேற்று ‘புன்னகையை பரிசளிப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது என்ன `புன்னகையைப் பரிசளிப்போம்’ என்று கேட்டதற்கு, 150 பேருக்கு இலவசமாக பல் செட் கொடுக்கப்போகிறோம் என்று கூறி வியப்படையச் செய்தனர்.

 இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சிந்தி சமூக நல அமைப்பின் தலைவர் சஞ்சாய் சப்ரியாவிடம் பேசினோம். “வயது அல்லது வெவ்வேறு காரணங்களுக்காக பற்களை இழந்தால், நமது முகத்தின் அழகே போய்விடும். `பல் போனால் சொல் போச்சு’ என்ற பழமொழியே இருக்கிறது. பற்களை இழந்த புன்னகை, அழகாய் இருக்காது. எனவேதான், `புன்னகையை இலவசமாக வழங்குவோம்’  என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். மங்களூரைச் சேர்ந்த ஏ.பி.ஷெட்டி நினைவு பல் மருத்துவ அறிவியல் மையம், கோவை ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை உதவ தாமாக முன்வந்தன. பொதுவாக செயற்கையாக ஒரு பல் செட் செய்ய ஐந்து நாட்களாகும். ஆனால், முதல்முறையாக 150 பேருக்கு ஒரே நாளில் பற்கள் அளவீடு செய்து, பற்களைப் பொருத்தியது இதுவே முதல்முறையாகும்.

கோவை நகரில் பல்வேறு இடங்களில் 500 பேரை ஆராய்ந்து, பல் செட் பொருத்த தகுதியான150 பேரை ஏற்கெனவே தேர்வு செய்திருந்தோம்.

இந்தப் பணியில், டாக்டர்கள், பேராசிரியர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமாணவர்கள் என 250 பேர் கொண்ட குழு,  18 மணி நேரம் ஈடுபட்டது. இந்த சாதனையை லிம்கா புத்தகத்தில்  இடம்பெறச் செய்யவும் முயற்சித்து வருகிறோம்” என்றார்.

`புன்னகையைப் பரிசளிப்போம்’ என்ற இந்த நிகழ்ச்சியில், 150 பேருக்கு இலவச பல் செட் பொருத்தும் பணியை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி

வைத்தார். இதில்,  ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் மோகன் குண்டப்பா, ஏ.பி.ஷெட்டி பல் மருத்துவ அறிவியல் மையத்தின் டீன் மற்றும் முதல்வர் கிருஷ்ணன் நாயக், சிந்தி வித்யாலயா பள்ளித் தாளாளர் ரெகஜா, சிந்தி சமூக நல அமைப்பின் செயலர்  நவீன் பதிஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE