புயல் எச்சரிக்கை; பேரிடர் மீட்புக் குழுக்கள் - நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

பேரிடர் மீட்புக் குழுக்களை புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதி, அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (ஏப்.25) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி 30.04.2019 அன்று வடதமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், நடுகடலுக்குச் சென்ற மீனவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் கடற்கரைக்குத் திரும்புமாறும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று (வெள்ளிக்கிழமை), தொடர்புடைய பிற துறை செயலர்கள் மற்றும் மத்திய படைகளின் உயர் அலுவலர்களுடன் எதிர்வரும் புயலினை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சில அறிவுரைகள் வழங்கினார்.

தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல்கள்:

* இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் குறிப்பாக கடலோர மாவட்டங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் அனைத்து கடலோர மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலுள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அனைத்து கடலோர மாவட்ட நிர்வாகங்களும் தக்க சமயத்தில் அறிவுறுத்த வேண்டும்.

* தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல பேருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், ஆகியன போதிய இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

* குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க ஊரக வளர்ச்சி / பேரூராட்சிகள் / நகராட்சிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* பேரிடர் மீட்புக் குழுக்களை புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும்.

* கடலுக்குச் சென்ற மீனவர்களை உடனடியாக கரை திரும்ப வேண்டியும், அடுத்த அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்கள்.

* படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாத வகையில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்.

* பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த போதிய படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் இந்திய கடலோர காவல் படையின் துணையினை நாடலாம்.

* ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மழை நீரைச் சேமித்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* நீர் வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரிநீர் தங்கு தடையின்றிச் செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* புயல் தமிழக கடற்கரையைக் கடக்கும் போது பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும்.

* மின்சாதனங்கள் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்படாத மாவட்டங்களிலுள்ள மின் பணியாளர்கள் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* தரைமட்டத்திலுள்ள மின்பெட்டிகள் உயர்மட்டத்தில் பொருத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* நீர்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். நீர்நிலைகளிலுள்ள கரைகள் உடையும் பட்சத்தில் அதனைச் சீர்செய்திட போதிய சாக்கு மூட்டைகள், சவுக்கு கட்டைகள், ஜே.சி.பி இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* வெள்ள நீர் தங்கு தடையின்றிச் செல்ல பாலங்கள் மற்றும் சிறுபாலங்களிலுள்ள அடைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

* மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

* சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள், பிற துறை உயர் அலுவலர்கள் மற்றும் மத்திய படையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE