செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கிறது: ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முழுவீச்சில் இயங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் விவரம்:

"மறைந்த தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று 12-10-2004 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற கிரீடம் சூட்டப்பட்டது. திமுக ஆட்சியினுடைய கோரிக்கையை ஏற்று, 19-05-2008 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை அன்றைக்கு வழங்கினார்கள். அப்படி, வழங்கப்பட்ட அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை அன்றைக்கு உருவாக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது ஆண்டுதோரும் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சி நடைபெற்ற போது 06-05-2011 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு குடியரசுத் தலைவரால் முதன்முதலில் செம்மொழி நிறுவனத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. செம்மொழி தமிழ், குடியரசுத் தலைவர் மாளிகையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மகிழ்ச்சியான காட்சியை அன்றைக்கு நாம் கண்டோம்.

ஆனால், இப்பொழுது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நிதி குறைக்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய செயல்பாடுகள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த நிறுவனத்திற்கு இன்றுவரை முழு நேர இயக்குநர் கூட நியமிக்கப்படாத ஒரு அநீதி நடந்து கொண்டிருக்கின்றது. செம்மொழி நிறுவனத்தினுடைய இணையதளத்தில் இருக்கக்கூடிய தகவலின்படி பார்த்தால், 2015-க்குப் பிறகு செம்மொழி விருது பெற்றிருப்போர் பட்டியல் இதுவரையில் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. 2015 – 16 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை கூட வெளியிடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்படவில்லை.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க முயற்சி நடைபெற்றது. உடனே, திமுக மட்டுமல்ல பல்வேறு கட்சித் தலைவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், மத்திய அரசு அதற்கு உடனே, திரும்பப் பெற்றுக்கொண்டது. அதனால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முற்றிலும் இப்பொழுது செயலிழக்க வைத்து தமிழை அவமானப்படுத்தக்கூடிய நடவடிக்கையில் இன்றைக்கு மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய ஒன்று.

ஆகவே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் முதல்வர் தான். எனவே, முதல்வர், இதுதொடர்பாக உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முழுவீச்சில் இயங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்"

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE