தமிழகம்

அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரைக் கொல்ல சதி? - கோவை, சென்னை, திண்டிவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

எஸ்.நீலவண்ணன்

அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கோவை மாநகர போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த சலாவுதீன் (25), வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரம் சம்சுதீன் (20) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த கோவையைச் சேர்ந்த ஆசிக் (25) என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவி செய்ததாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த பைசல், குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் 7 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்  உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநிலத் தலைவர் அன்புமாரி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரமுகர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் கோவைக்கு வந்தது தெரியவந்தது. இவர்களில் திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கோவை மாநகர டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் இஸ்மாயிலை திண்டிவனத்தில் உள்ள கசாமியான் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது வீட்டிலிருந்த இஸ்மாயிலின் தந்தை சுல்தான் இப்ராஹிம் (50), சகோதரர்கள் ஜாகீர் உசேன் (28), இஸ்மாயில் (25), சதாம் உசேன் (24) ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது உறவினர்களிடமும் இஸ்மாயில் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இஸ்மாயிலுடன் போலீஸார் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) டிஎஸ்பி ஷாகுல் அமீது தலைமையிலான அதிகாரிகள் திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டில் காலை 6 மணி முதல் 11 மணிவரை சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் கைப்பற்றிய ஆவணங்களை 2 சூட்கேஸ்களில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

அதேபோல் கோவை உக்கடத்தைச் சேர்ந்த பைசல், கோவையைச் சேர்ந்த ஆசிக், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, ஓட்டேரியைச் சேர்ந்த சலாவுதீன், பல்லாவரம் சம்சுதீன் ஆகியோரின் இல்லங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT