சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் - மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
மத்தியமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஒரு வளிமண்டலகீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.