படங்கள்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

‘வேலூர் மக்களின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்

வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாப்பதுபோல் இந்தியா முழுவதும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (அக்.4) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 49 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.17.91 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.11.80 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வரவேற்றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக வேலூர் கோட்டை இருக்கிறது. வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை என பல விஷயங்களில் இந்தியளவில் புகழ்பெற்றுள்ளது. பல இடங்களில் கோட்டை இருந்தாலும் வேலூர் கோட்டையை போல் இல்லை. வேலூர் கோட்டையில் ஒரே இடத்தில் கோயில், மசூதி, தேவாலயம் இருப்பது வேறு எங்கும் இல்லை. வேலூர் கோட்டை மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்களும் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் மக்களாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமை இந்தியா முழுவதும் இருக்க வேண்டும். வேலூர் மக்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் எந்த திட்டம் தொடங்கினாலும் மகளிர் அதிகளவில் பயன்பெறும் திட்டம் இருக்கும். அவரது முதல் கையெழுத்திட்டது மகளிர் விடியல் பயணம் திட்டத்தில்தான். நான்கரை ஆண்டுகளில் 820 கோடி பயணங்களையும், வேலூர் மாவட்டத்தில் 15 கோடி பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர். முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 22 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். தரமான காலை உணவு, தரமான கல்வி வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் தினமும் 41 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் 8 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.20 கோடி பேர் பயன் பெறுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். வரும் டிச.15-ம் தேதி முதல் கூடுதலான பேர் மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் ரூ.200 கோடியில் பென்ட்லேண்ட் உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனை, ரூ.40 கோடியில் குடியாத்தம் அரசு மருத்துவமனை, ரூ.20 கோடியில் அணைக்கட்டு அரசு மருத்துவமனை, ரூ.14 கோடியில் காட்பாடி அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக ரூ.5 கோடியில் பீஞ்சமந்தைக்கு மலைப்பாதை, ரூ.13 கோடியில் காட்பாடி அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. குடியாத்தத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு ரூ.3 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது.

மகளிர் குழுவினருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்த அட்டையை காண்பித்தால் மகளிர் குழுவினர் தயாரிப்பு பொருட்களை அரசு பேருந்துகளில் 25 கிலோ எடையுடன் 100 கிலோ மீட்டர் வரை கட்டணம் இல்லாமல் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். நீங்கள் பல உயரம் அடைய வேண்டும் என்று முதல்வரும் இந்த அரசும் என்றென்றும் விரும்புகிறது. அதற்காகத்தான் உங்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை முதல்வர் தீட்டி வருகிறார். இதை நீங்கள் இன்னும் நாலு பேருக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக (தூதுவராக) இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் இந்த திராவிட மாடல் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், வில்வநாதன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT