சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் எம்எல்ஏ ஆக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படுகிறார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான மறைந்த பி.ஹெச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமான திமுகவில் இணைந்துள்ளேன்; தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொண்டர்களின் உழைப்பை அங்கீகரிக்காதவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் எந்தவொரு காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. இது குறித்து இன்று வரை பதில் இல்லை. எந்த கொள்கைக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ, அது காற்றில் விடப்பட்டுள்ளது.
அதிமுகவை தோற்றுவித்த தலைவரும், அதற்குப் பின்னால் அந்த இயக்கத்தை பாதுகாத்து வளர்த்த ஜெயலலிதாவும் எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவை யாருக்கும் அடகு வைக்கவில்லை. அவர்கள் காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. இன்றைய அதிமுக என்பது வேறு. மற்ற இயக்கத்தை நம்பி ,அவர்களின் சொல்படி நடக்கிறது. பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.