தமிழகம்

அதிமுக - பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? - ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமா என்ற கேள்விக்கு, நல்லதே நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து உடைப்பவர்கள் மற்றும் மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள் எல்லாம் மாநாடு நடத்தினால், முருகன் எப்படி அவர்களோடு செல்வார்? தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை நடத்திய முருகன் மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? ஆனால், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களால் முருக பக்தர்கள் மாநாடு மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால், வாக்கு வங்கிக்காக மாநாடு நடத்தியதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மற்ற மதத்தவர்கள் சபை கூட்டங்களை நடத்துவதைப்போல், முருக பக்தியை வெளிப்படுத்தும் மாநாடு நடத்தப்பட்டது. இதில் அடுத்த மதத்தினரை புண்படுத்தவில்லை. யாருக்கும் வாக்களிக்குமாறு கேட்கவில்லை. இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டை திசை திருப்ப திமுக முயற்சிக்கிறது.

கடந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறையாக அமைந்திருந்தால், இப்போது திமுக ஆட்சியிலேயே இருந்திருக்காது. திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு கிடையாது. திமுகவின் குடும்ப ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோருக்கு அடுத்ததாக தலைவராக வர அவர்கள் குடும்பத்தில் ஆட்கள் தயாராக உள்ளனர்.

அதிமுக-பாஜக கூட்டணி என்று அமித்ஷா சொன்ன நாளில் இருந்து திமுக பயத்தில் உள்ளது. திமுகவுக்கு தேர்தல் பயமும், தோல்வி பயமும் வந்துவிட்டன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று ஏற்கெனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நல்லதே நடக்கும்’ என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT