அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் 
தமிழகம்

‘அரசு எப்படியோ, அப்படியே அரசுப் பேருந்துகளும்’ - அன்புமணி விமர்சனம்

தமிழினி

சென்னை: பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுநரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுநரையோ, நடத்துநரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.

பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT