தமிழகம்

கரோனா, வைரஸ் காய்ச்சல் பரவல்: பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழங்கியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் சமூக, கலாச்சார, ஆன்மிக நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அதில் அதிகமானோர் பங்கேற்பதும் அதிகரித்துள்ளது. அந்த கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, கிருமிநாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகம் செய்ய கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கொசுக்கள், பூச்சிகள் மூலம் பரவும் நோய்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். குறிப்பிட்ட இடத்திலோ, பகுதியிலோ நோய் தொற்று பரவினால் உடனடியாக அதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நோய்கள் ஓரிடத்தில் தீவிரமாக பரவினால், அதுகுறித்து ஆய்வு செய்து, மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளை தள்ளிவைக்கவோ, நிறுத்திவைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT