சென்னை: மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்? மீனவர்களுக்கு உண்மையாகவே துரோகம் செய்தது திமுகதான் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தபின், ‘18 ஆண்டுகள் மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்?’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக உறுப்பினர்கள் வந்தனர்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதுதொடர்பாக அதிமுக சார்பில் கருத்துகளை முன் வைத்துள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1974-ம் ஆண்டு இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தது. அப்போது எம்ஜிஆர் அதை கடுமையாக எதிர்த்தார்.
காலங்காலமாக தமிழக மீனவர்கள், ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் கச்சத்தீவைப் பயன்படுத்தி வந்தனர். அன்றைய தினம் திமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. அப்போது திமுக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
எனவே, அன்று முதல் இன்றுவரை தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர். 16 ஆண்டுகாலம், மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியுடன் அங்கம் வகித்தபோது, மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நான் பேசினேன். ஆனால், எனக்கு முழுமையாக பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. மீனவர்களின் வாக்குகளைப் பெறுதற்காக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி, திமுக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. ஆனால், மீனவர்களுக்கு உண்மையாகவே துரோகம் செய்தது திமுகதான். 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாமே. கடைசி பட்ஜெட்டில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற காரணம் என்ன?
திமுக கூட்டணியில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே, கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்த ஆண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.