தமிழகம்

நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் மீது தலைவர்கள் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

நீட் தேர்வு அச்சத்தால் சென்னை, கிளாம்பாக்கத்தில் மாணவி தர்ஷினி தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நீட் என்ற தேர்வை நாட்டுக் கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழகத்தில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவுக்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா ?

இதுவரை நாம் இழந்த 19 மாணவர்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன ? உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் ? மாணவி தர்ஷினி மரணத்துக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே முழு பொறுப்பு.

அதேநேரம், மாணவர்களும் எதற்காகவும் இன்னுயிரை இழக்கத் துணியக் கூடாது. வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது. வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. ‘நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்ல வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதை த் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளி விவரங்களில் இருந்து உறுதியாகிறது. இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவர்களின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள னர்.

SCROLL FOR NEXT