தமிழகம்

கத்தாரில் உளவு; கைதான 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களும் விடுதலை: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கத்தார் நாட்டு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கைதான 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை அந்நாடு விடுதலை செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்குப் போர் பயிற்சி அளித்து வந்தனர். அப்போது, கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாகக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சுரபா வாஷிஸ், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர்கள் புரனேடு திவாரி, சுகன்கர் பகலா, சஞ்ஜீவ் குப்தா, அமித் நாக்பால், மற்றும் மாலுமி ராஜேஷ் ஆகிய 8 பேரையும் கத்தார் நாட்டின் தேசிய பாதுகாப்புப்படை கைது செய்தது. இந்த 8 பேருக்கும் அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.

இந்திய வெளியுறவுத்துறை அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 8 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 8 பேரது குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், 8 பேரது நிலை குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கும், கத்தார் நாட்டு தூதரகத்துக்கும் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக்கூறி சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த நந்தகோபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், “கத்தாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேரும் அந்நாட்டு அரசால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

அதில் 7 பேர் இந்தியா திரும்ப விரும்புகின்றனர். ஒருவர் மட்டும் கத்தாரிலேயே தொடர்ந்து தங்க இருக்கிறார். இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கையை ஏற்று அந்த 8 பேரையும் விடுதலை செய்த கத்தார் நாட்டு அரசுக்கு மத்திய அரசின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். இதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT