விபத்தில் காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த எம்.எல்.ஏ செல்வராஜ் 
தமிழகம்

கோத்தகிரியில் விபத்தில் சிக்கிய மினி வேன் - சிறுவன் உயிரிழப்பு, 31 பேர் காயம்

செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கிய மினி வேனில் பயணித்த ஓட்டுநர் உட்பட 31 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 7 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பவானிசாகர் அணைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா நிமித்தமாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 32 பேர் மே 1-ம் தேதி அன்று மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் மினி வேனை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சூழலில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, விவரம் கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT