சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் (வயது 92) காலமானார். அவரது உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் நேற்று முன்தினம் (ஏப்.22) கொடைக்கானலில் காலமானார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கமல்ஹாசனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அமரர் ஊர்தியில் சீனிவாசன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மாமா பற்றி கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன், புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கலைஞானி கமல்ஹாசன் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் விமானப்படை வீரருமான சீனிவாசன் கோபாலன் மறைவுற்றார் என்ற செய்திஅறிந்து பெரிதும் வருந்தினேன்.
அவரை இழந்து வாடும் அருமைச் சகோதரர் கமல்ஹாசனுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.