சென்னை: தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஏப்.12) பாஜக முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டமாக நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் பாஜக முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வரவுள்ளார். வரும் 12-ம் தேதி மதியம் 12 மணி அளவில் மதுரை வருகிறார் அமித் ஷா. அன்று மதியம் 3.50 மணிக்கு சிவகங்கையில் நடைபெறும் வாகன பேரணியில் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதன்பின் அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார். அதன்பின் அன்றைய இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அன்றிரவு மதுரையில் தங்கும் அமித் ஷா, மறுநாள் காலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
கன்னியாகுமரியின் தக்கலை பகுதியில் காலை 10 மணி அளவில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன்பின் நாகப்பட்டினம் பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். தொடர்ந்து மாலை 6 அளவில் தென்காசியில் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதிகளில் அமித் ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, அமித் ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.