சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன் (76). அதிமுகவை சேர்ந்தஇவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் திமுகவில் இருந்த ராமகிருஷ்ணன், அப்போதைய அச்சிறுப்பாக்கம் சட்டப்பேரவை தனித் தொகுதியில் வெற்றி பெற்று, 1989-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மீண்டும் அச்சிறுப்பாக்கம் சட்டப்பேரவை தனி தொகுதியில் 1991- 95 வரையில் எம்எல்ஏவாக பதவி வகித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார். அவரதுமறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவஅணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமகிருஷ்ணன், கட்சி மீதும், கட்சித் தலைமை மீதும்மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றியவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.