தமிழகம்

மதுரை சித்திரை திருவிழாவின்போது வாக்குப் பதிவு தவிர்க்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 2019-ம் ஆண்டு மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டமும், கள்ளழகர் எதிர் சேவையும் ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. ஆனால், அதே நாளில் மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு நடந்தது.

இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததுடன் வாக்களிக்க ஆர்வமாகச் சென்ற வாக்காளர்களும் பல்வேறு சிரமங் களைச் சந்தித்தனர். எனவே, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் திருவிழா நாட்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறாமல் இருக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த 1961-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே சுமார் 5 லட்சம் மக்கள் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்றுள் ளதாக பதிவாகியுள்ளது. தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, வரும் ஏப்ரல் 12-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வுகளாக 19-ல் பட்டாபிஷேகம், 21-ல் திருக் கல்யாணம், 22-ல் தேரோட்டம் மற்றும் அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வரும் எதிர்சேவையும், தொடர்ந்து 23-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெற உள்ளன.

இதேபோன்று, தென் மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு கோயில்களில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பொதுத்தேர்தலின் போது தொகுதிகளின் முக்கியத் திருவிழா நாட்களைக் கணக்கில் கொண்டுதான் தேர்தல் தேதிகளை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் நடைமுறையாக இருந்தது. ஆனால், 2019-ல் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறும் நாளில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை நடத்தியது தென் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தும் கூட தேர்தல் தேதி மாற்றப்படவில்லை. அதனால் சித்திரைத் திருவிழா பக்தர்கள், வாக்காளர்கள் என இரு தரப்பினருமே சிரமங்களைச் சந்தித்தனர். மேலும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 2019-ம் ஆண்டில் வாக்குப்பதிவு சரிந்தது.

2014-ம் ஆண்டு தேர்தலில் மதுரை தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் 2019-ல் 65.83 சதவீத வாக்குகள்தான் பதிவானது. வாக்குப் பதிவில் சுமார் 2 சதவீதம் சரிந்தது. தேர்தல் ஆணையம் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கியும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வாக்குப்பதிவு குறைந்தது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

அதற்கான கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி யுள்ளன. வழக்கம் போல் ஏப்ரல், மே மாதங்களிலேயே வாக்குப்பதிவு நடை பெறக் கூடும். இதனால், மதுரை சித்திரைத் திருவிழா நாட்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

SCROLL FOR NEXT