காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பிக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினர். 
தமிழகம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பாஜகவினர் கோஷம்: வாக்குவாதம் முற்றியதால் பாதியில் வெளியேறினார் @ காரைக்குடி

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்ற ரயில்வே நிகழ்ச்சியில், மத்திய அரசை விமர்சித்து பேசிய கார்த்திசிதம்பரம் எம்.பியை வெளியேறச் சொல்லி பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பாதியில் வெளியேறி னார்.

அம்ருத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தில், நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வேதிட்டங்களுக்கு நேற்று பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல்நாட்டியும், முடிவுற்ற சில பணிகளை தொடங்கியும் வைத்தார். அதன்படி, காரைக்குடி ரயில் நிலையத்தில் ரூ.13.91 கோடி மதிப்பிலானபணிகளுக்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு: நிகழ்ச்சி தொடங்கும் முன்பு, கார்த்தி சிதம்பரம் பேசும்போது ‘‘தமிழகத்தில் இருந்து நாம் ரூ.1 வரி செலுத்தினால், திரும்ப 29 காசு தான் வருகிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ரூ.1 செலுத்தினால், அவர்களுக்கு ரூ.2.73 திரும்பகிடைக்கிறது. மேலும் தெற்கு ரயில்வேயிடம் ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தால்,ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து செய்யமறுக்கின்றனர்’’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கார்த்தி சிதம்பரத்தை வெளியேறுமாறு கோஷமிட்டனர். அரசுவிழாவில் அரசியல் பேசாதீர்கள் என்றும், இதுவரை உங்க குடும்பம்நாட்டுக்கு என்ன செய்தது..? என்றும் கூச்சலிட்டனர்.

கடும் வாக்குவாதம்: இதையடுத்து அங்கிருந்த பாஜகவினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பாஜகவினர் ‘மோடி வாழ்க’ என்றும் ‘கோ பேக் கார்த்தி’ என்று கூச்சலிட்டனர்.

இதனால் கோபமான கார்த்தி சிதம்பரம், தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு வேகமாக வெளியேறினார். அவருடன் மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோரும் சென்றனர்.

SCROLL FOR NEXT