தமிழகம்

பூந்தமல்லி - பரந்தூர், ஆவடி - கோயம்பேடு வரை நீட்டிப்பு: விரிவான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் வரையும், ஆவடி – கோயம்பேடு வரையும் நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தை கிளாம்பாக்கம் வரை 26 கி.மீ. தொலைவுக்கு ( வழி:கேளம்பாக்கம் ) நீட்டிக்கவும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரத்தில் இருந்து கோயம் பேடு வழியாக சோழிங்க நல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம் பேட்டில் இருந்துஆவடி வரை 17 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும் சாத்திய கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்றன.

முதல்கட்டமாக, சிறுசேரி – கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து சாத்திய கூறு அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சமர்ப்பித்தது. தொடர்ந்து, கலங்கரை விளக்கம் –பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித் தடத்தை பரந்தூர் வரை நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக் கூறு அறிக்கை கடந்த மாதம் 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு,ஆவடி – கோயம்பேடு, பூந்தமல்லி – பரந்துார் மெட்ரோ திட்டத்துக்குஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையைதயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

கோயம்பேடு – ஆவடி நீட்டிப்பு திட்டத்தில் பாடி புதூர் நகர், பார்க்ரோடு, கோல்டன் பிளாட், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் உட்பட 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பூந்தமல்லி – பரந்தூர் நீட்டிப்புதிட்டத்தில் நசரத் பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் உட்பட 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – பரந்துார், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தடத்தில் தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் வரையில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். பரந்துார் விமான நிலையம் அமையும் போது, மேலும், இந்த தடத்தில் கூட்டம் அதிகரிக்கும்.

இதேபோல, அதிக நெரிசல்மிக்க வழித் தடமாக இருக்கும் கோயம்பேடு – ஆவடிக்கு மெட்ரோரயில் திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்ட அறிக்கை அடுத்த 4 முதல் 6 மாதங்களில் தமிழக அரசிடம் அளிக்க உள்ளோம். விரிவான திட்ட அறிக்கையில், மேம்பால பாதை, சுரங்கப் பாதை வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT