சேலத்தில் நடந்த அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

“மதுரையில் புளியோதரை மாநாடு, சேலத்தில் பிரியாணி மாநாடு” - தினகரன் விமர்சனம்

செய்திப்பிரிவு

சேலம்: மதுரையில் அதிமுக புளியோதரை மாநாடு நடத்தியும், சேலத்தில் திமுக பிரியாணி மாநாடு நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளனர், என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி என மக்களால் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் , முன்னாள் முதல்வர் பழனிசாமி தனக்குத்தானே புரட்சித் தமிழன் என்று பட்டத்தை வழங்கிக் கொண்டார். அவர் புரட்சித் தமிழன் இல்லை;

புரட்டு தமிழன் என்பது விரைவில் தெரியவரும். துரோகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரட்டை இலை, தற்போது, ஒரு துரோகியின் கையில் சிக்கியுள்ளதால், பலவீனப்பட்டு விட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நமது வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட உள்ளேன். இதற்காகத் தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. தேவைப்பட்டால் அமமுக தனியாகக் கூட போட்டியிடும்.

மதுரையில் அதிமுக புளியோதரை மாநாடு நடத்தியும், சேலத்தில் திமுக பிரியாணி மாநாடு நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளன. சட்டப் பேரவை தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தாத்தா என காட்டியுள்ளார். மக்களை ஏமாற்றுவதே அதிமுக, திமுக-வின் ஒரே சாதனை. திமுகவிற்கும் பழனிசாமிக்கும் மாற்று சக்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என மக்கள் நம்புகின்றனர், என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இண்டியா கூட்டணி மாநில கட்சிகளால் முரணாக அமைக்கப் பட்ட கூட்டணி. எலியும், தவளையும் சேர்ந்து அமைத்தது போன்ற கூட்டணி. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஒரு படி மேலே சென்று, கூட்டணியை விட்டு விலகியதோடு பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிஹாரில் ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார். இண்டியா கூட்டணியில் கடைசியில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் மிஞ்சுவார். ராமர் கோயில் கட்டியதால் வட மாநிலங்களில் பாஜக-வுக்கு ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று தமிழகத்தில் பாஜக-வுக்கு ஆதரவு பெருகி உள்ளதா என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரிய வரும். விலைவாசி உயர்வு என்பது மத்திய அரசின் மீது ஒரு குற்றச்சாட்டாக கூறப்பட்டாலும், ஊழலற்ற ஆட்சியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்.இந்தியாவில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இருக்கும்.

துரோகம், ஏமாற்று வேலை மட்டுமே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தெரிந்த அரசியல். ஆளுநர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. அதை உணர்ந்து தமிழக ஆளுநர் செயல்படுவதே அவருக்கும், அந்த பதவிக்கும் அழகு. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT