2 ஆண்டுகளில் 504 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த 2 ஆண்டுகளில் 504 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை எட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறைந்ததால், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கை குறைந்திருந்தது. ஆனால், 2022-ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 264 மீனவர்களை கைது செய்தனர். இதேபோல், 2023-ம் ஆண்டில் 35 மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து, 240 மீனவர்களை கைது செய்தனர்.

புதிய மீன்பிடிச் சட்டம்: இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோல், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளி நாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத் துறையால், கடந்த 2018 ஜனவரி 24 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் வாயிலாக, படகின் நீளத்தை பொருத்து இலங்கை மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.17.5 கோடி வரையில் அபராதமும், கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப் படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை கடல் எல்லைக்குள் சிறை பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு, இந்த சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுகின்றன.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த விசாகலிங்கம் என்ற மீனவருக்கு 14 மாதங்களும், ராமேசுவரத்தைச் சேர்ந்த நம்பு முருகன் என்ற மீனவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் வேல்

இந்நிலையில், இந்த புத்தாண்டு முதலாவது மீனவர்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பது குறித்து ஏஐடியுசி மீனவ தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில் வேல் கூறியதாவது: இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு கட்டங்களாக டெல்லி, சென்னை, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம், இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள அவகாசமும், இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் நாட்களை குறைத்துக் கொள்வதாகவும், தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இறுதியாக, கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு, அதில் எடுக்கப்படும் முடிவுகளை இரு நாடுகளும் சட்டமாக இயற்றி, அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்