சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை அரசுக்குதெரிவிக்கும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்களை உள்ளடக்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அதேநேரம், ஓய்வூதியர்களைப் பொருத்தவரை அகவிலைப்படி உயர்வு பிரச்சினையில் இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை.
2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவது தெரிகிறது. எனவே, கூட்டமைப்பு சார்பில்ஓய்வுபெற்ற நல அமைப்புகளுடன்விவாதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடவுள்ளோம். இது தொடர்பான ஆலோசனை, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. இதில் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் ஓய்வூதியர் சங்கங்கள் பங்கேற்பார்கள். இதில்எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வைபெறுவதற்கான செயல்பாடுகள் திட்டமிடப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.