இந்தியாவில் முதல் முறையாக செங்கல்பட்டில் ரூ.594 கோடியில் தடுப்பூசி உற்பத்தி நிலையம் தொடங்கப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதல்முறையாக செங்கல்பட்டில், ரூ.594 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், ரூ.83 லட்சம் செலவில், மாநில தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு நிலையத்துக்கான குளிர்பதன அறை, உறைநிலை வைப்பு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இவற்றை திறந்து வைத்தார். மேலும், ரூ.9 கோடி மதிப்பில் ஆயிரத்து 696 புதிய குளிர்சாதன பெட்டிகள், உறை நிலை வைப்பு பெட்டிகள், மின் சமநிலை கருவிகளும் இந்நிகழ்ச்சியின்போது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டன.

மேலும் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் போலியோவால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இதற்கான விருது கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி ஆகிய நோய்கள் முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மருந்துகளும் மக்களுக்கு சென்றடையும் வரை குளிர்பதன முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. மேலும், ரூ.594 கோடியில் நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்

சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE