இருக்கைகள் இல்லாததால் தரையில் அமரும் பயணிகள்: சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் அவதி!

By ப.முரளிதரன்

சென்னை: சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழ்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு, கோவை ஆகிய வட மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களுக்கும் மற்றும் டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் தினசரி விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவைத் தவிர, சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகிறது.

5 லட்சம் பயணிகள்: வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனைய வளாகத்தில் உள்ள பொதுத் தளத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, பயணிகள் தரையில் அமர வேண்டியுள்ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவ்வாறு வரும் பயணிகள் அமர போதிய இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை. குறைவான இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால், பலர் தரையில் அமருகின்றனர். குறிப்பாக, வழியில் அமர்ந்து கொள்கின்றனர்.

இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கும், இறங்கிச் செல்லும் பயணிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. விரைந்து செல்ல வேண்டிய நேரங்களில் பலர் ரயிலை தவறவிடும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. அதேபோன்று, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரயில்களில் வரும் நோயாளிகளும் அமர்வதற்கு இருக்கை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

மேலும், கடந்த ஓரிரு மாதங்களாக அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதால் ரயில் ஏற வரும் பயணிகள் கால்கடுக்க ரயில் நிலையத்தில் காத்து நிற்கின்றனர். அப்போது, அமர்வதற்கு இருக்கை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும், சில பயணிகள் தரையில் உட்கார்ந்து கொண்டு தாங்கள் எடுத்துவரும் உணவுப் பொருட்களை அங்கேயேவைத்து உண்கின்றனர். உண்ட பிறகு அந்த இடத்தை அவர்கள் முறையாக சுத்தப்படுத்துவதும் கிடையாது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

கூட்ட நெரிசல்: மேலும், நடைமேடைகளில் இருக்கைகள் இருந்தாலும், பயணிகள் அங்கு அமருவதில்லை. காரணம், அவர்கள் போக வேண்டிய ஊருக்குச் செல்லும் ரயில் எந்த நடைமேடையில் வரும் என தெரியாது. எனவே, அவர்கள் அனைவரும் பொதுத் தளத்தில்தான் காத்திருக்கின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் நலன் கருதி போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் போதிய இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டன. ஆனால், அதை சில பயணிகள் சேதப்படுத்தியதால் அவை பழுதடைந்துவிட்டன. புதிய இருக்கைகளை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

52 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

58 mins ago

மேலும்