சோமங்கலம் - தாம்பரம் வழித்தடத்தில் மீண்டும் வருமா 18எஸ் பேருந்து? - ஏக்கத்தில் காத்திருக்கும் ஏழை மக்கள்

By செய்திப்பிரிவு

சோமங்கலம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது சோமங்கலம் ஊராட்சி. இங்கிருந்து, குன்றத்தூருக்கு 88-எம் என்ற தடத்தில் 2 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் சோமங்கலத்தில் இருந்து, தாம்பரத்துக்கு 18-எஸ் என்ற தடத்தில் 2 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் செல்லும் வழிதடத்தில் உள்ள, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்துகளில் பயணித்து பயனடைந்தனர். இந்நிலையில், கரோனா ஊரடங்குக்குப் பிறகு குன்றத்தூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து சோமங்கலத்துக்கு நேரடியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதற்கு மாற்றாக, 89-டி என குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் வழியாக தாம்பரத்துக்கு, 4 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் மாநகராட்சி மற்றும், குன்றத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளின் உள்ளே இந்த பேருந்து சென்று வருவதால் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் சோமங்கலம் சுற்றுப் பகுதிகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறும்போது, குன்றத்தூரில் இருந்து சோமங்கலத்துக்கு நேரடியாக இயக்கப்பட்ட அரசு பேருந்து நாளொன்றுக்கு, 16 முறை இயக்கப்பட்டது. இதேபோல் தாம்பரத்துக்கு நாளொன்றுக்கு, 16 முறை அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் எந்த நேரத்தில் பேருந்து வரும் என்பதை அறிந்து வைத்திருந்தோம். இந்நிலையில், இந்த பேருந்துகள் நேரடியாக சோமங்கலத்துக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு, குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படுவதால், நாளொன்றுக்கு, 10 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில், 50-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தாம்பரம் மற்றும் குன்றத்தூர் பகுதிகளின் உள்ளே இந்த புதிய தட பேருந்துகள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் பேருந்துகள் எந்த நேரத்துக்கு வருகிறது என்றே தெரியவில்லை. இதனால், பணிக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர் ௭ன பலதரப்பட்டோர் வேதனையை அனுபவித்து வருகிறோம். பேருந்துகள் சரிவர வருவதில்லை. வந்தால் 3 பேருந்துகள் அடுத்தடுத்து வரிசை கட்டி வருகின்றன. எனவே, முன்பு இருந்ததுபோல், குன்றத்தூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து சோமங்கலத்துக்கு நேரடியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்றனர்.

ராஜா

இதுகுறித்து, நடுவீரப்பட்டை சேர்ந்த ராஜா என்பவர் கூறும்போது, சோமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏழ்மையான நிலையில் அன்றாட வேலைக்கு செல்பவர்களே ௮திகம். முன்பு 18-எஸ் பேருந்து சேவை இருந்தபோது சோமங்கத்தில் இருந்து தாம்பரம், மீண்டும் அங்கிருந்து சோமங்கலம் வரை இயக்கப்படும். இந்த பேருந்து சேவை முழுக்க, முழுக்க ஏழை மக்களுக்காகவே இயக்கப்பட்டது. எப்போதும், பேருந்தில் கூட்டம் இருக்கும். 7 ரூபாயில் சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் சென்றவர்கள், இன்று, ஆட்டோவுக்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.

தாம்பரம் மார்க்கெட்டில் வேலை செய்பவர்கள், சுகாதார பணி, கட்டிட வேலைக்கு செல்பவர்கள், அன்றாட வேலைக்கு செல்பவர்களுக்கு 18-எஸ் பேருந்துதான் வரப்பிரசாதமாக இருந்தது. கரோனா காலத்தில் பேருந்தை நிறுத்தியவர்கள் இப்போது மீண்டும் இயக்க மறந்துவிட்டனர். அதற்கு மாறாக, குன்றத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு வேறு புதிய பேருந்தை இயக்குகின்றனர். இது மக்களுக்கு போதிய பலனளிக்கவில்லை. மீண்டும் 18-எஸ் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ஆப்ரகாம்

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஆப்ரகாம் கூறும்போது, சென்னை புறநகர் பகுதியான சோமங்கலத்தில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதிய குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. அரசு சார்பில் பெண்களுக்கு இலவசமாக பேருந்து சேவை மேற்கொள்வதால் ஏராளமான பெண்கள் பேருந்தை எதிர்பார்க்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், நகர பகுதிக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு வசதியாக இருந்த நிலையில், சோமங்கலம் - தாம்பரம் பேருந்து நிறுத்தப்பட்டது.

மேலும், சோமங்கலம் அருகே நல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசிக்கின்றனர். தமிழக அரசும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஏழைப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் வழியாக நெல்லூர் வரை பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்