தமிழகம்

தன்பாலினர் திருமண வழக்கின் தீர்ப்பு முதல் சிவகாசி பயங்கர வெடி விபத்து | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.17, 2023

செய்திப்பிரிவு

சிவகாசியில் இரு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 14 பேர் உயிரிழப்பு: சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கணேச மூர்த்தி. இவர் ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலையும் அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை மதியம் உணவு இடைவேலையின்போது, பட்டாசு ஆலையில் பணிபுரிந்த சுமார் 15 தொழிலாளர்கள் பட்டாசு கடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

அதேபோல், சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சக்கரம் ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இரு ஆலைகளிலும் 14 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் மோசடி தொடர்கதை”: “தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தன்பாலினர் திருமணத்தை அங்கீகரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முதலில் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர், “உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும்தான் இயற்ற முடியும்” என்று தெரிவித்தார்.

நீதிபதி பட் தனது தீர்ப்பில் கூறுகையில், "திருமண பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசை வலியுறுத்த மட்டுமே முடியும்" என்றார். தொடர்ந்து நீதிபதி கவுல் அளித்த தீர்ப்பில், "தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலம் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்துவைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஈடுபட்டிருந்த பெண் நீதிபதி ஹீமா கோலி தீர்ப்பேதும் வழங்கவில்லை. இந்த வழக்கில் 5-ல் நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், 3 நீதிபதிகள் தன்பாலின திருமணத்தை சட்டபூர்வ அங்கீகரிப்பது நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர்.

‘லியோ’படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: ஐகோர்ட் : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்துக்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“திரைத் துறையில் சர்வாதிகாரம்” - ஜெயக்குமார் விமர்சனம்: ரெட் ஜெயன்ட் மூவீஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டிருக்கிறது என்றும், முழுக்க முழுக்க திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர் என்றும், இது திமுக ஆட்சியில்தான் நடப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்களா?: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரிசு அரசியல் குறித்து ராகுல் காந்தி ஆவேசம்: மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ‘வாரிசு அரசியல்’ குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித் ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்.பி.யின் புகார்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரை, மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

“ஹமாஸ் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் ஓயாது” - நெதன்யாகு: ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றம் அரசு நிர்வாகத் திறனை அழித்தொழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான தொலைபேசி உரையாடலின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ரஷ்யா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு அரசு நெருக்கடி: சீமான் கருத்து: “நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT