காவல் துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் சனிக்கிழமை பிற்பகலில் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நண்பகலில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 16 காவலர்கள் மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களில் 10 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட, காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை முதல் அவரது உடல், அவரால் தொடங்கப்பட்ட சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
“தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... பேச்சு நடத்த முன்வராத அரசு”: “பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது மயங்கிவிழுந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு: திருமாவளவன் வலியுறுத்தல்: வாச்சாத்தி தீர்ப்பு பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்குப் புகட்டப்பட்ட பாடம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வேலையும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செலுத்திய பிரீமியம் ரூ.16.70 கோடி; வழங்கிய இழப்பீடு ரூ.1.13 கோடி: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது 856 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செலுத்தியிருந்த நிலையில், 4 கிராம விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1.13 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்.7 வரை நீட்டிப்பு: வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இந்தக் காலகெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதுவரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மகளிர் இடஒதுக்கீடு சட்டம், தண்ணீரில் தெரியும் நிலவின் பிம்பம்”: “மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால், இது நடைமுறைக்கு வர பல வருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், 2029-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு பல வருடங்கள் நடைமுறைக்கு வராத சட்டத்தால் யாருக்கு என்ன பயன்? இது கிண்ணத்து தண்ணீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு” என்று தெரிவித்துள்ளார்.
ம.பி. சிறுமியிக்கான செலவுகளை ஏற்ற காவல் அதிகாரி: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமியின் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக, அந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி அஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
விஷால் குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதில்: மார்க் ஆண்டனி படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால், அண்மையில் சென்சார் போர்டு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஊழலை அறவே சகித்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்சார் போர்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆசிய போட்டி 2023-ல் மேலும் இரண்டு தங்கம்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது, இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. சீன தைபே இணையை வீழ்த்தி இந்த வெற்றியை இருவரும் பெற்றுள்ளனர்.
அதே போல், ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
“பேச்சு சுதந்திரத்தை யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை”: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.