பிரமேலதா விஜயகாந்த் | கோப்புப்படம் 
தமிழகம்

தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் பிரேமலதா நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து கட்சிகளிடமும் நட்புடன் இருக்கிறோம். தேர்தலுக்கான பணிகளோ, கூட்டணி சார்பான விஷயங்களோ, அதற்கான அழைப்புகளோ, பேச்சோ இப்போது வரை தொடங்கப்படவில்லை. கூட்டணி தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கவில்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் தேமுதிக தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

பிரதமரை சந்திப்போம்: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து பெற வேண்டிய நீரை அனைவரும் ஒன்று சேர்ந்து பெற வேண்டும். தற்போது கர்நாடகத்தில் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடந்து வருகிறது. அங்கு எத்தனையோ கட்சிகள், அமைப்புகள் உள்ளன.

ஆனாலும் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று கூடி கர்நாடக உரிமைக்காக குரல் எழுப்புகின்றனர். இந்த நேரத்தில் தமிழர் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரும் விவசாயிகளுக்கு பலமாக இருந்து குரல் கொடுக்க வேண்டும்.

அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து டெல்லிக்கு சென்று பிரதமரையும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத் தர முதல்வர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது நதிநீர் இணைப்பு குறித்து வலியுறுத்த வேண்டும்.இந்த ஒருங்கிணைப்பை தேமுதிக முன்னெடுக்குமாறு கூறினாலும், நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனையில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம்.சி.பழனி, வேல்முருகன், வி.சி.ஆனந்தன், மாறன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT