சென்னை: பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பிரதமர் மோடி தனது 73-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி, ஆயுஷ் ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை பாஜகவினர் நடத்தி வருகின்றனர். மேலும், அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளை நேற்று நடத்தினர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மோடி பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜகவினர் வழங்கினர். சென்னை அம்பத்தூரில் மோடியின் 73-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகபாஜக சார்பில் 73 அடி உயர கட்சி கொடி அமைக்கப்பட்டிருந்தது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கொடியேற்றிவைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல், கோயம்பேடு தானிய அங்காடி மார்க்கெட்டில் பாஜக பிறமொழி பிரிவு சார்பில் 500பேருக்கு புடவைகளும், 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. திருவான்மியூரிலும்பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்திர சிங் யாதவ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.