சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் செபாஸ்டின் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் வார விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை தனது கல்லூரி நண்பர்கள் 3 பேருடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எழுந்த ராட்சத அலை நண்பர்கள் 4 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் வெளியேறிய நிலையில் செபாஸ்டின் மட்டும் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத நண்பர்கள் அதிர்ச்சியில் நண்பரைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக நீலாங்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
முன்னதாக தகவல் அறிந்து அப்பகுதி மீனவர்கள் படகில் சென்று தேடினர். மேலும், போலீஸார் கடலோர பாதுகாப்புக் குழும வீரர்கள் உதவியுடன் தேடினர். ஆனாலும், மாயமான செபாஸ்டினை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.