காரைக்குடி: ‘தமிழக அமைச்சர்களான உதயநிதி, சேகர் பாபுவை கைது செய்ய வேண்டும்’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனாதனம் என்றால் தொன்மையானது, ஒழுக்கமானது, தர்மத்தின்பால் உள்ளது என்று பொருள். இத்தகைய சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் உதயநிதி. சனாதனம் எதிர்ப்பு என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார் உதயநிதி. ராமாயணம், மகாபாரதத்தை படிக்காததால், அவர் அப்படித்தான் பேசுவார்.
உதயநிதி, சேகர்பாபு பேசியதை இந்தியில் மொழி பெயர்த்து, நாடு முழுவதும் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். இதனால், தேர்தலில் தற்போது உள்ள இடங்கள்கூட எதிர்க் கட்சிகளுக்கு கிடைக்காது. இந்து விரோதச் செயலில் ஈடுபடும் அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறையில் இருக்க முடியாது. எனவே சேகர்பாபு, உதயநிதியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.