கோவை: சீமானின் சவாலை ஏற்க பாஜக தயார். நாம் தமிழர் கட்சியைவிட 30 சதவீத வாக்குகளை கூடுதலாக வாங்கிக் காட்டுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் 8 மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடைபெறுவதால், கொள்கை முடிவு எடுக்க முடிவதில்லை. எனவேதான், ஒரே நாடு, ஒரே தேர்தலைக் கொண்டு வருகிறோம். அதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இதை வரவேற்றுள்ளன.
மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ரூ.10.76 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை மத்திய அரசு தந்துள்ளதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்கள் இண்டியா கூட்டணியில் உள்ளனர்.
எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும். மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த திட்டத்துக்கு திமுக சொந்தம் கொண்டாடாமல், சிறப்பாக செயல்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சவாலை ஏற்க பாஜக தயார்.
அவர்களைக் காட்டிலும் 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கிக் காட்டுவோம். சீமானை யாரும் சேர்க்கவில்லை என்பதால்தான், அவர் தனித்துப் போட்டியிடுகிறார். அதிமுக மாநாட்டுக்கு ஆட்களை அழைத்து வந்ததாக நான் கூறவில்லை. ஒரு கட்சியைப் பிரித்து,மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நான் கருதியதில்லை.
கோவை கார் குண்டு வெடிப்புகாவல் துறைக்கு கரும்புள்ளி. ஆபத்தில் இருந்து கோவை இன்னும் முழுமையாக தப்பவில்லை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் கையெழுத்திடக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.