பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

காரில் கொண்டு செல்லப்பட்ட 776 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளி பறிமுதல்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 776 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கும்பகோணம் நோக்கிச் சென்ற காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, போலீஸார் சோதனை நடத்தினர். காரில் 776 பவுன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

எனினும், அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. காரில் வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருவாரூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் எழில்மாறன், கடை ஊழியர் ஐயப்பன் மற்றும் கார் ஓட்டுநர் செந்தில் குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தங்கம், வெள்ளி, ரூ.1 லட்சம் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக நகைக் கடை உரிமையாளர் எழில் மாறன் கூறியதால், தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT