பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க புதிய சட்டம்: அரசுக்கு கோரிக்கை

சென்னையில் மற்றுமொரு பாரம்பரிய சிறப்புமிக்க கட்டிடம் தீ விபத்தால் இடிந்து சேதமடைந்துள்ளது. பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க புதிய சட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை ‘இன்டாக்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள வரலாறு மற்றும் கலாச்சார ரீதியிலான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கத் தேவை யான வழிமுறைகளை வகுக்கும்படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தை (சிஎம்டிஏ) தமிழக அரசு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, நகரில் உள்ள பாரம்பரிய பெருமை வாய்ந்த கட்டிடங்களைக் கணக் கெடுக்கும் பணியை 2011-ல் கட்டிடக் கலை மாணவர்களை வைத்து சிஎம்டிஏ தொடங்கியது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத 100 கட்டிடங்களைக் கண்டறிந்து அதன் வரைவுப் பட்டியலை வெளியிட் டுள்ளது. கிங் இன்ஸ்டிடியூட், கச்சாலீஸ்வரர் கோயில், பெரம்பூர் ஜமாலியா பள்ளி, லஸ் சர்ச், ராயபுரம் ரயில் நிலையம், எழும்பூர் வெஸ்லி சர்ச், பி.ஆர்.ஆண்டு சன்ஸ், அண்ணா சாலை பாட்டா மற்றும் அடிசன் கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன் றவை அப்பட்டியலில் இடம்பெற் றுள்ளன. கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

சிஎம்டிஏ பட்டியலில் இடம் பெற்றுள்ள கலஸ் மஹால், பாரிமுனை ஜிபிஓ கட்டிடம், அண்ணா சாலை அகர்சந்த் மேன்ஷன், எல்ஐசி போன்ற பாரம்பரிய கட்டிடங்களில் கடந்த 3 ஆண்டுகளில் தீ விபத்துகள் நடந்துள்ளன. தற்போது மற்றொரு பாரம்பரிய கட்டிடமான பாரிமுனை பாரத ஸ்டேட் வங்கி கட்டிடமும் சனிக்கிழமை தீ விபத்தில் சிக்கி கடும் சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அமைப்பின் (இன்டாக்) அமைப்பாளர் எஸ். சுரேஷ், ‘தி இந்து’விடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படும் கட்டிடங்களைத் தவிர, மற்ற பழமையான கட்டிடங்களை பாதுகாக்க போதிய சட்டங்கள் இல்லை. சிஎம்டிஏ சில நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது.பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலில் தனியார் கட்டிடங்கள் அதிகம் உள்ளதால், அங்கு நெறிமுறைகளை எப்படி அமல்படுத்தப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.

எனவே பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க புதிய சட்டங்களை உடனடி யாக உருவாக்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் பல முக்கிய பாரம்பரிய கட்டிடங்கள் தீவிபத்தில் பாதிப்படைந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள், மின்வசதி இல்லாத காலத்தில் கட்டப்பட்டவை. அவற்றில் ஏசி போன்ற மின்சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தும்போது விபத்து ஏற்படும் அபாயம் அதிகம்.

எனவே, பாரம்பரிய கட்டிடக் கலை வல்லுநர்களை ஈடுபடுத்தி, அந்தக் கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுரேஷ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE