ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் இடையே ரயில் ஓடும் நாள் எந்நாளோ? - மக்களின் 10 ஆண்டு கால ஏக்கம் தீருமா?

By ப.முரளிதரன்

சென்னை: ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் இடையே ரயில் ஓடும் நாள் எந்நாளோ? - மக்களின் 10 ஆண்டு கால ஏக்கம் தீருமா?
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்முறையாவது இத்திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல பன்னாட்டு தொழிற்சாலைகள் ஆலைகளை நிறுவியுள்ளன. மேலும், பல நிறுவனங்கள் தங்களது கிளைகளை நிறுவி வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படுகின்றன. ரயில்கள் மூலம் கொண்டு செல்ல, அவை சென்னை சென்ட்ரலுக்கு சாலைகள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில்கள் மூலம், நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதேபோல், துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் இதே நிலைதான். இந்நிலையில், உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்தே ரயில்கள் மூலம் கொண்டு செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதூருக்கு தனி ரயில் பாதை அமைத்து தர, அங்குள்ள தொழிற்சாலை நிர்வாகங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று ரயில்வே நிர்வாகம், சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் மார்க்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு ரூ.600 கோடி செலவில் 60 கி.மீட்டர் தூரத்துக்கு புதிதாக ரயில் பாதை அமைக்க தீர்மானித்தது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே இணை அமைச்சராக இருந்த முனியப்பா, இதற்கான அறிவிப்பை கடந்த 2013-ம் ஆண்டு வெளியிட்டார். மேலும், ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறினார். ஆனால், அதன்பின் நடவடிக்கையும் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்முறையாவது இத்திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஆவடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைத்தால், பூந்தமல்லி ஒரகடம் பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையும். மேலும், அப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள திருமழிசை தொழிற்பேட்டையும் வளர்ச்சி அடையும். மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவிடம் பெரும்புதூரில் உள்ளது.

இதைக் காண, நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சென்னை வரை ரயில் மூலம் வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் ராஜிவ் நினைவிடத்துக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் பயனடைவர். அத்துடன், ரயில்வே நிர்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும். ஏற்கனவே, பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அத்துடன் புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மனைகளின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடித்தால் திட்ட செலவும் குறையும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவடி-பெரும்புதூர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணி நிறைவடைந்ததும் அடுத்தக்கட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்