தொடர் கனமழை எதிரொலி... குமரி வழித்தட ரயில் சேவை ரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் ஓகி புயலின் தாக்கத்தினால் கன மழை பெய்து வருகிறது, சூறைக்காற்றும் வீசியது. இதனால் ரயில் சேவை ந்துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையமான நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள வழித்தடத்திலும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதன் கிழமை இரவு முதல் குமரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ரயில் தண்டவாளங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ரயிலில் ஏற வந்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கன்னியாகுமரி_நாகர்கோவில் ரயில் வழிப்பாதையில் வடக்குத் தாமரைக்குளம் அருகில் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்ததால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்தானது.

தொடர் மழை, சூறைக்காற்றின் காரணமாக நாகர்கோவில்_கன்னியாகுமரி, நாகர்கோவில்_திருவனந்தபுரம், நாகர்கோவில்_திருநெல்வேலி வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் நேற்று மாலை வரை ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவில்_கொச்சுவேலி, கொச்சுவேலி_நாகர்கோவில், கொல்லம்_கன்னியாகுமரி மெமு, கன்னியாகுமரி_கொல்லம் ஆகிய ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இதே போல் வண்டி எண்:56715 புனலூர்_கன்னியாகுமரி பயணிகள் ரயில் நெய்யாற்றாங்கரையோடு நிறுத்தப்பட்டது. வண்டி எண் 16724 கொல்லத்தில் இருந்து சென்னை வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயில், கொல்லம்_திருவனந்தபுரம் இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வண்டி எண் 16723 சென்னை எக்மோர்_கொல்லம் இடையேயான ரயில், நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தோடு நின்றது. திருச்சி_திருவனந்தபுரம் இண்டர் சிட்டி ரயிலும் நேற்று திருநெல்வேலியோடு நின்று போனது. இதே போல் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம்_நெல்லை வழித்தடத்தில் ரத்து செய்யப்ப்பட்டு நேற்று மதியம் 2.,30க்கு நெல்லையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களும் நேற்று பல மணி நேரம் தாமதமாக சென்றது. தொடர் மழையினால் போக்குவரத்து சேவை முடங்கிய நிலையில், ரயில் போக்குவரத்தும் முடங்கியதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE