தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் தினகரன். உடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர். 
தமிழகம்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் ஓபிஎஸ் - தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தேனி: கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தோடு, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இணைந்து பங்கேற்றார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதன்முறையாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கோடநாட்டில் கொலை நடந்த அன்று தடையற்ற மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்டது யார்? கண்காணிப்பு கேமராவை செயல்படாமல் செய்தது யார்? என்று விசாரித்தாலே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து விடமுடியும்.

திமுக தேர்தல் வாக்குறுதி: கோடநாடு கொலை வழக்கை விசாரித்து, 90 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் போராட்டமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது: அரசியலில் எனது தாய் மண் தேனி ஆகும். இதே இடத்தில்தான் ஜெயலலிதாவால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டேன். கோடநாடு குற்றவாளிகள் யார் என்பதும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் பலருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், திமுக அரசு இந்த வழக்கை மறந்துவிட்டது.

இயல்பான சந்திப்பு: இந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை அடையாளப்படுத்தாவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் போராட்டமாக மாறும். 30 மாதங்களாகியும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ஓ. பன்னீர்செல்வம் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நானே விரும்பி கலந்து கொண்டேன். இது இயல்பாக நடந்த சந்திப்பு. தமிழகம் முழுவதும் இந்த இரு அணிகளுக்குள்ளும் இணைப்பு நடந்துள்ளது. அதிமுக சின்னம், கட்சியை மீட்டு உண்மையான தொண்டர்களிடம் ஒப்படைப்போம். அதற்காகத்தான் இப்போது ஒன்றிணைந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஆவின் தலைவர் ஓ.ராஜா, அமமுக மாநில அமைப்புச் செயலாளர் மகேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துச்சாமி, நகரச் செயலாளர் காசிமாயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஓபிஎஸ், தினகரன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும் அவர்களது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT