ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்க சாதி தடையில்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோயில் செயல் அலுவலர் கடந்த 2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோயிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றிவரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த மாதம், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என்பதைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் தனது பணிகளை தொடங்கவில்லை. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அர்ச்சகர்களை நியமிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்தக் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்தால், அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜை, அபிஷேகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலைப் பொருத்தமட்டில் ‘காரணம் - ஆகமம்’ பின்பற்றப்படுவதாக சொத்துப் பதிவேட்டில் உள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

எனவே, ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது. அதாவது ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது.

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் புதிதாக அர்ச்சகர்களை தேர்வு செய்யும் வரை மனுதாரர் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். பின்னர் நடத்தப்படும் தேர்வில் மனுதாரரையும் பங்கேற்க அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராகவும், சென்னை தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராகவும் இருப்பதாகக் கூறி, முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வள்ளியப்பன், "ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகராக வருபவர்கள் பரம்பரை வழியாகத்தான் நியமிக்க வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை, ஆகமங்களை பின்பற்றாது கோயில்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தொடர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த பணி நடந்துவரும் நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக்கூடாது. 2405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளது" என்று வாதிட்டார்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்