தமிழகம்

‘நடைபயணத்தால் அண்ணாமலை உடலுக்கு தான் நல்லது’ - சீமான் கருத்து

இ.ஜெகநாதன்

இளையான்குடி: ‘‘நடைபயணத்தால் அண்ணாமலை உடலுக்கு தான் நல்லது’’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப் பள்ளி பவள ஆண்டு விழா நடைபெற்றது. இதில், இப்பள்ளி முன்னாள் மாணவரான சீமான் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பாஜகவிடம் பெரும்பான்மை எம்பிக்கள் இருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் எதுவும் நடக்காது. வேடிக்கையாக தான் இருக்கும். அண்ணாமலையின் அரசியல் லாபத்துக்காக தான் ஆளுநரிடம் திமுக ஊழல் பட்டியலை கொடுத்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளது. அதை ஏன் வெளியிடவில்லை. நடைபயணத்தால் அண்ணாமலை உடலுக்கு தான் நல்லது. உடற்பயிற்சி சென்றது போல் இருக்கும். இது மிகவும் பழைய மாடல். இதனால் ஒன்றும் ஆகாது. பாஜக எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என நினைக்கிறது. ஒரு கட்சி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அதை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார். தீபாவளிக்கு வடை சுட, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.

விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறி கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வேளாண்மைக்கு செய்ததாக எதற்கு பிரதமர் பேச வேண்டும். வேளாண்மைக்கு என்ன செய்துள்ளார். திமுக ஆட்சியை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கொடுமையான ஆட்சி நடக்கிறது. அதை பற்றி பேசி பயனில்லை.

விலைவாசி உயரும்போது ரூ.1,000 வைத்து கொண்டு பெண்களால் என்ன செய்ய முடியும். விளை நிலங்களே குறைவு தான். இந்த சூழ்நிலையில் விளையும் பயிர்களை இயந்திரங்கள் மூலம் அழிப்பது மனசாட்சி இல்லாதது. இதை கண்டித்து பாமக போராட்டம் நடத்துவதற்கு வாழ்த்துக்கள். நாங்களும் போராடுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT