சென்னை: டாஸ்மாக் மதுக்கடை அருகில் பார் நடத்தும் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பாணையை, 2022 ஆக. 2-ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது பார் நடத்துவோர், அந்த இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வற்புறுத்துவதாகக் கூறி, அந்த டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கேட்டு 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமம் பெற்றவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், “நில உரிமையாளருடன் நாங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிலையில், அந்தஇடத்தை 3-வது நபருக்கு வழங்குமாறு நிர்பந்திக்க முடியாது. எனவே, அந்த டெண்டருக்கு தடை விதித்து, பார் உரிமத்தை நீட்டித்து தர வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனிநீதிபதி, டெண்டர் அறிவிப்பாணைகளை ரத்து செய்து, 2022 செப். 30-ல்உத்தரவிட்டார். மேலும், புதிதாக டெண்டர் அறிவிப்பாணை வெளியிடும்போது, நில உரிமையாளர்களிடம் ஆட்சேபனையில்லா சான்று பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குநேற்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மதுவிலக்கு கொண்டுவர மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சட்ட கொள்கைகள் கூறும்போது, மாநில அரசின் சட்டம் மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.