தமிழகம்

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கிறது

செய்திப்பிரிவு

விருதுநகர்: பெங்களூருவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் பிரதமர் மோடி குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்.

பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்டத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார். தற்போது பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றனர். பொது சிவில் சட்டத்தைப் புரிந்து கொண்டு பலரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை, பழங்குடியின மக்களும் எதிர்க்கின்றனர். முஸ்லிம்களை நேரடியாகப் பாதிக்கும் விதமாக பொது சிவில் சட்டம் வருமானால் அதை முழுமையாக எதிர்ப்போம்.

தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என கூறிய திமுக, தற்போது அதை வரையறை செய்துள்ளது. நிபந்தனைகளை விலக்கி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு பாராட்டு: அமெரிக்க டாலர்களை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் நிலையில், இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசைப் பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT