சென்னை: ராகுல்காந்தி வழக்கு விவகாரத்தில் பாஜக அரசு பழிவாங்குவதாகக் கூறி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
2019 மக்களவைத் தேர்தலில் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி. பதவியை இழந்தார். இந்த தீர்ப்புக்கு தடை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், பாஜக அரசு பழிவாங்குவதாக குற்றம்சாட்டியும், பாஜகவைக் கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் கூடினர். பின்னர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டபோது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் 100-க்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல்காந்தி வழக்கில் குஜராத் மண்ணில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பது நன்றாகத் தெரியும். குஜராத்தில் திட்டமிட்டு இந்த வழக்கை நடத்துகிறார்கள். இதிலிருந்து பாஜகவின் பழிவாங்கும் போக்கு புலப்படுகிறது. பிரதமர் மோடி சிறந்த அரசியல்வாதியாக இருந்தால், ராகுல்காந்தியை தேர்தல் களத்திலும், மக்கள் மன்றத்திலும் சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், எம்எல்ஏ அசன் மவுலானா, மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.