திருச்சி எடமலைப்பட்டி புதூரிலிருந்து ரெட்டைமலைக்குச் செல்லும் வழியில் ஒப்பந்த அடிப்படையிலான தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு நேற்று வெடி வைத்து, பாறைகளைத் தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதற்காக சுமார் 300 அடி ஆழத்தில் பாறையின் பக்கவாட்டில் துளை ஏற்படுத்தி, அதனுள் வெடிபொருட்களை வைக்கும் பணியை புங்கனூரைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் செந்தில் (35), மருதமுத்து மகன் செல்வம் (50) ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அப்போது, கம்ப்ரஷரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிக அதிர்வு ஏற்பட்டு, பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய செல்வம், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக குவாரி உரிமையாளரும், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் உறவினருமான போஸ்கோ ஜெயராஜ், மேலா ளர் தங்க வேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.