ஆவின் பால் பண்ணை பணியில் சிறார்? - அரசு மறுப்பு: “அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி. அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
“ஆவின் பால் திருட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடுக”: பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்றில், “வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே “கடந்த 2 ஆண்டுகளில் வேலூர் ஆவினில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் ” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் அருகே கோயிலுக்கு சீல் - போலீஸ் குவிப்பு: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான தர்மா ராஜா திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 7-ம் தேதி மாலை தேர்த் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீது ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வளவனூர் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வரும் பிரச்சினை தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 முறை அமைதிக் கூட்டம் போடப்பட்டும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், கோயிலை பூட்டி சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி புதன்கிழமை காலை 6 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு பதற்றம் நிலவுவதால், கிராமத்துக்குள் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பட்டியலின மக்களை அனுமதிக்காத கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், மேல்பாதி கிராமத்தில் வெளியூர் ஆட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான நடவடிக்கைக்கு ஐகோர்ட் அனுமதி: அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“ஒன்றிணைந்த செயல்பாடு” - தினகரன், ஓபிஎஸ் பேச்சு: “திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று தஞ்சாவூரில் நடந்த அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், “நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும்” என்றார்.
உ.பி - லக்னோ நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை: உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா, அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இதுதான் ஜனநாயகமா? ஒருவர் யாரால் கொல்லப்பட்டார் என்பது அல்ல முக்கிய கேள்வி. ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால் பாதுகாப்பு இருக்கிறதா, சட்டம் - ஒழுங்கு இருக்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி" என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரிடம் 5 நிபந்தனைகள் வைத்த மல்யுத்த வீராங்கனைகள்: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரின் அழைப்பை ஏற்று, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது, கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்" என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து, ஜூன் 15 வரை தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்
ஒடிசா ரயில் விபத்து: அதிகாரிகளின் செல்போன்களை கைப்பற்றிய சிபிஐ: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
மொபைல் போன்களில் பதிவாகி உள்ள தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ்அப் கால்கள், சமூக ஊடக பயன்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகோ பைலட்டிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 80-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், 33 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அணை தகர்ப்புக்கு ஐ.நா கண்டனம் : ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டுச் சென்றது. டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது.
இதனிடையே ரஷ்யாவின் மகாடனில் சிக்கியிருக்கும் பயணிகளை சான் பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்ல மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பி வைக்கப்படும் என்றும், பயணிகளுக்கு அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும், அவர்கள் உள்ளூர் ஹேட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புதன்கிழமை ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.