கடலூர் சூறைக்காற்றில் 2,370 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்: ஆய்வு செய்த அமைச்சர்

By க.ரமேஷ்

கடலூர்: "கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு விவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று ஆய்வுக்குப் பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்படைந்து வந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை (ஜூன் 5) மாலை கடலூர் பகுதியில் திடீர் சூறைக்காற்று வீசியது. இதில் ராமாபுரம், ஒதியடிகுப்பம், கீரப்பாளையம், வழி சோதனைபாளையம் எம். புதூர், வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், குமளங்குளம், புலியூர், சத்திரம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் சாய்ந்து முறிந்து விழுந்தன. இவைகள் அனைத்தும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்யப்பட்டவையாகும்.

இது குறித்து ராமபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு வருகின்றோம். கடந்த ஜூலை மாதம் வாழை பயிரிடப்பட்டு தற்போது மரமாக வளர்ந்து ஒவ்வொரு மரத்திலும் வாழைத்தார்கள் குலை தள்ளி உள்ளது. இந்த வாழை மரங்களை சுமார் 10 மாதம் வெயில், கடும் மழை என பாராமல் பாதுகாத்து வந்தோம். வருகின்ற ஜூலை மாதம் அறுவடை செய்ய இருந்தோம். லட்சக்கணத்தில் செலவுசெய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி உள்ளது .

வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து வீணாகி குப்பையில் கொட்டக்கூடிய நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அளவீடு செய்து உரிய முறையில் இழப்பிட்டுத்தொகை வழங்க வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

கடலூர் அருகே ராமபுரத்தில் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்

இந்த நிலையில், இன்று (ஜூன் 6) தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் தனித்தனி இருசக்கர வாகனத்தில் ஒதியடிகுப்பம், வெள்ளக்கைரை, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராங்களில் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை பார்வையிட்டனர். எஸ்பி. ராஜாராம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்(பொறுப்பு) அருண் மற்றும் வருவாய், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு விவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்