தமிழகம்

ரயில் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு | மத்திய அரசை ஒடிசா முதல்வரே பாராட்டியுள்ளார் - ஹெச்.ராஜா

செய்திப்பிரிவு

திருச்சி: ஒடிசா ரயில் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து அம்மாநில முதல்வரே பாராட்டியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது; ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை முடிவு வரும் வரை பொறுமையாக இருப்போம். மேலும், விபத்தின்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று, 24 மணி நேரத்தில் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சர் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பிரதமர் மோடி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். ஒடிசா முதல்வரே மத்திய அரசின் ஒத்துழைப்பான நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. வரும் மக்களவை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடரும். புதிதாக வேறு கட்சிகள் வரவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT