புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய புதிய நாடாளுமன்றம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன். ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய ஓர் இடம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவையின் நுழைவாயிலில் கையில் தாண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம் இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது புதிய நாடாளுமன்றக் கட்டடம்.

கட்டடத்தின் நடுநாயகமாக சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் மிகப்பிரமாண்டமாக விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேருமலையை மத்தாகவும் ஆதிசேஷனைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் பாற்கடலைக் கடையும் காட்சி பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் யாரைச் சுட்ட நினைக்கிறார்கள் இவர்கள்?

உண்மையில் அவையின் மையப்பகுதியில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டியது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டக் காட்சிகளாகும். அப்போராட்டத்தின் விளைவாக விடுதலைபெற்ற இந்தியர்கள், தாங்களே உருவாக்கிக்கொண்ட மகத்தான அரசமைப்புச் சட்டமே இந்த அவையையும் இந்த தேசத்தையும் வழிநடத்துகிறது. ஆனால் இதனைக் காட்சிப்படுத்தினால் தங்களின் துரோக வரலாற்றை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது போல அமைந்துவிடும் என்பதற்காக பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அரசமைப்புச் சட்ட நூல் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள கலைவடிவங்கள். அசலான அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால் போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்களை மறுஉருவாக்கம் செய்து காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படையில் நந்தலால்போஸ் ஓவியங்கள் ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்தியத் தொன்மையையும் வரலாற்றையும் பண்பாட்டையும் முன்னிறுத்தும் முக்கியமான கூறுகளைக் கொண்டுள்ளன.

அந்த ஓவியங்கள் சிந்துவெளிப் பண்பாடு, பண்டைய பல்கலைக்கழகங்கள், முகலாய கட்டிடக்கலை, சுதந்திரப் போராட்ட வரலாறு, தேச விடுதலைக்காகவும் மதக்கலவரங்களுக்கு எதிராகவும் அண்ணல் காந்தி எனப் பன்மைத்தன்மை மிக்கதாகவும் சான்றதாரங்களின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. ஆனால் இவர்கள் உருவாக்கியுள்ள இந்த 16 கலைவடிவங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன.

முதலில் இதில் சிந்துவெளிப் பண்பாட்டிற்கு இடம் இல்லை. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு நேர்மாறாக வேதப் பண்பாட்டிலிருந்து தொடங்குகிறார்கள். இங்கே இதிகாசங்கள் வரலாறாக மாற்றப்படுகின்றன. நந்தலால் போஸ் வரைந்ததில் இதிகாசங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தெளிவாக காவியக்காலம் என்று கூறப்பட்டிருக்கும். வரலாறு என்று சொல்லப்பட்டிருக்காது. இங்கு இதிகாசம், வரலாறு என்று கூறப்படுகிறது. இதிகாசத்தை வரலாறாகத் திரிக்கும்போக்கிற்கு இது நேரடி அங்கீகாரம் வழங்குவதாக உள்ளது.

வேதங்களில் சபா, சமிதி, சன்சாத் போன்ற சொல்லாடல்களோடு மனித மாண்பினை இழிவுப்படுத்தும் சொல்லாடல்களும் குறிப்பாக மனிதர்களைச் சாதி, வர்ண ரீதியாகப் பிளவுபடுத்தும் சொல்லாடல்களும் காணப்படுகின்றன. சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு வர்ணங்கள் முற்றிலும் எதிரானவை. அவற்றினை மேற்கோளாகக் கட்டுவதும் தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.

சனாதனம் இந்த மண்ணில் உருவாக்கிய எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான பிரகடனமே அரசமைப்புச் சட்டம்.

சனநாயகம் என்பது முற்றிலும் நவீனகாலச் சிந்தனையாகும். மன்னராட்சியிலிருந்து தன்னைப் பிரித்து, அதனை எதிர்த்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வெளிவந்த செயல்பாடாகும். பண்டைய காலத்தில் காணப்பட்ட சபை, சங்கம் முதலியவற்றை சனநாயகம் என்று சொல்வது மீண்டும் பழமைவாத தன்மைக்குத் திரும்புவதாகும்.

உத்திரமேரூர், உக்கல் கல்வெட்டுகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் நடைபெற்ற விசயங்கள் ஆகும். அவற்றை ஒட்டுமொத்த மக்களுக்கானதாய் பார்க்க முடியாது. அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட இலக்கியங்கள் அரசர்களை மையப்படுத்தியவை. மக்களுக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கும் இருந்ததில்லை.

இந்த 16 கலைவடிவங்கள் சனநாயகத்திற்கான வேர்கள் பண்டைய இந்தியாவில் உள்ளன என்பதை எடுத்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அதன்வழி பண்டைய காலத்தில் சனநாயகம் நிலவியதாகக் கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா தனது பண்டைய ஆட்சிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வழியுறுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சனநாயகம் என்னும் நவீனகாலச் சிந்தனை அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளைக்கொண்டது. சனநாயகம் அரசாட்சியை எதிர்த்துப் பெற்றதாகும்.

இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மௌரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் ஆகியோரை உள்ளிட்ட எல்லோருடைய கூறுகளையும் உள்ளடக்கிய அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. அவை இந்த 16 கலைவடிவங்களில் இல்லை.

பன்மைத்துவங்கொண்ட நந்தலால் போஸ்ஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் சனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும் நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும்.

அவர்களின் கட்சி அலுவலகத்தில் நிறுவிக்கொள்ள வேண்டியனவற்றை நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் இந்துத்துவா கோட்பாடுகளால் இந்த அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவர்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

மேலும்