நிரப்பப்படாமல் இருக்கும் 2,100 தலைமையாசிரியர் பணியிடங்கள் - மாணவர் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

By சி.பிரதாப்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7-ல் திறக்கப்பட உள்ள சூழலில், 2,100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் வலைதளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பொது கலந்தாய்வு மே 8 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இதன் விசாரணையில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையேற்று பதவி உயர்வு கலந்தாய்வை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் பணி ஓய்வு, காலிப்பணியிடம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப் பள்ளி, 435 உயர்நிலைப் பள்ளி உட்பட 2,100-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கலந்தாய்வு நிறுத்தப்பட்டதால் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை நிலவுகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், பராமரிப்பு பணிகள் மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் கூறியதாவது: ஒரு பள்ளியில் ஆசிரியர் இல்லாவிட்டால் ஒருவரை தற்காலிகமாக பணியமர்த்த முடியும். ஆனால், தலைமையாசிரியர் இல்லையெனில் அந்த பள்ளியின் மாணவர் சேர்க்கை, பள்ளியின் சீரமைப்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணிக்கு மட்டுமே டெட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு அமலானது. தற்போது பதவி உயர்வு தகுதிப்பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்களே இடம் பெற்றுள்ளனர். திடீரென டெட் தேர்ச்சியை முன்வைத்து அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்க்காமல் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி தேவைஇல்லை எனும் முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். அதை முன்வைத்து நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து பள்ளிகள் சுமுகமாக இயங்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மண்ட் கூறும்போது, “ஒரு பள்ளியில் 750 மாணவர்கள் இருந்தால் மட்டுமே பொறுப்பு தலைமையாசிரியர்களை நியமிக்க முடியும். அத்தகைய பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உட்பட நிர்வாகப் பணிகள் முடங்க வாய்ப்புள்ளது. மேலும், பதவி உயர்வு வழங்கிய பின் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார.

நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆ.ராமு கூறும்போது, “எமிஸ் பதிவேடுகள் தொடங்கி அரசின் திட்டங்களை அமல்படுத்துதல் வரை பள்ளி தலைமை ஆசிரியருக்கான பணிகள் ஏராளம். பொறுப்பு தலைமையாசிரியராக உள்ள ஆசிரியர்கள் இத்தகைய நிர்வாக வேலைகளுடன், கற்பித்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எனினும், அலுவல் பணிகளுக்கு முக்கியத்துவம் தர கல்வித்துறை அழுத்தம் தருவதால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும். எனவே, பதவி உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

29 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

43 mins ago

ஆன்மிகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்